'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்!'

இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்த ஜெபமானது, அன்றைய நாள் முதல் அவரை பின்பற்றுகிற அனைவராலும் தொடர்ந்து ஜெபிக்கப்பட்டு வருகிற அழகானதும் எளிமையானதும், மிகவும் ஆழமானதாகவும் இருக்கிறது. இது சிறுவர்கள் கூட மனப்பாடம் செய்து பயன்படுத்தக்கூடிய ஜெபமாக காணப்படுகிற அதேவேளையில், ஆண்டவருடைய பரமண்டல ஜெபத்தினை கற்றுக்கொண்ட அறிஞர்கள், இந்த தனித்துவமான ஜெபத்தின் ஆழமான அர்த்தத்தினை நாம் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நம்புகின்றனர்.

ஆண்டவருடைய பரமண்டல ஜெபமானது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் பிதாவாக இருப்பது, அவரது பரிசுத்தம் மற்றும் அவரது இறையான்மை போன்ற ஆண்டவருடைய முக்கிய பண்புகளுக்கூடாக அவர் யாரென்பதை குறித்து ஜெபத்தின் முதலாவது பகுதி கவனம் செலுத்துகிறது (மத்தேயு 6:9-10). ஜெபத்தின் இரண்டாவது பகுதியானது, இயேசுவை பின்பற்றுபவர்கள் தெய்வீக திட்டம், தெய்வீக மன்னிப்பு மற்றும் தெய்வீக பாதுகாப்பு போன்றவைகளை சார்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது (மத்தேயு 6:11-13). இந்த இரு பகுதிகளையும் இயேசு அற்புதமாக இணைத்துள்ளதை அறிய முடிகிறது. ஆண்டவர் எமது பிதாவாக இருப்பதால், எமக்கு அன்றாட தேவைகளை அவர் வழங்குவார் என்றும், அவர் பரிசுத்தமுள்ளவராக இருப்பதால், எமது பாவங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு அவரிமிருந்து மன்னிப்பினை மன்றாடுவதற்கும், அவர் ஆளுகை செய்பவராக இருப்பதால், எம் திராணிக்கு மேலான சோதனைகளிலிருந்து பாதுகாப்பையும், தீயதிலிருந்து விடுதலையாக்கத்தினையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்' என்ற ஜெப விண்ணப்பமானது ஒன்றுக்கு மேற்பட்ட பல உட்கருத்துகளை வெளிப்படுத்துகிறதாக காணப்படுகிறது. முதலாவதாக, நம்முடைய பிதாவாகிய கடவுள் அணுகப்படக்கூடியவராக இருப்பதால், நம்முடைய கோரிக்கைகளை நாம் நேரடியாகவே அவரிடத்தில் முன்வைக்கலாம். இவ்வுலகத்திலுள்ள தகப்பன்மார்கள் தமது பிள்ளைகள் ஏதேனும் கேட்டால் இயல்பாகவே அவர்களுக்கு சிறந்ததை செய்வதிலும் பார்க்க, அதிக அன்போடும், மனப்பூர்வமாகவும் தமது பிள்ளைகளுக்கு மாறுத்தரம் அளிப்பதற்கு வல்லவராயிருக்கிறார் என்பதை இயேசு மத்தேயு 7:7-11 பகுதிக்கூடாக விளக்குகிறார். இயேசு கடவுளை 'என் பிதா' என தனித்துவமாக அழைத்திருக்கிறபடியினால், இயேசுவிற்கூடாக நாமும் கடவுளை 'எமது பிதா' என்றழைக்கும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். இதனால் 'ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.' (எபிரெயர் 4:16) என எழுத்தாளரால் எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில் இவ்விதமாக கூற முடிந்தது.

இரண்டாவதாக, இந்த ஜெபமானது தனிநபருக்குரியதென வரையறுக்கப்படவில்லை. 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்' என்ற இந்த ஜெபத்தின் பின்னணியில் கூட்டுப்பரிமாணத்தினை பேணுகிறதாக காணப்படுகிறது. தனிப்பட்ட தேவைகளையும், விருப்பங்களையும் முக்கியத்துவப்படுத்துவது என்பது, எமது உலகமயமாக்கப்பட்ட கலாச்சார பண்புகளில் ஒன்றாகும். இதை வணிக உலகில் தமது உற்பத்திகளை விற்பதற்கான ஒரு வழியாக பயன்படுத்தும் உற்பத்தியாளர்களும், சேவை வழங்குனர்களும் காணப்படுவதால், அவ்விதமாகவே எனது தன்னலமுள்ள விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றுகிற அண்டசராசர சேவை வழங்குனராக கடவுளும் மாறுத்தரம் அளிப்பாரென்ற சிந்தனையானது மேலோங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும், மனிதர்கள் அடிப்படையில் சமூகம் சார்ந்தவர்கள் என்பதால் இயேசு சமூக அக்கறையுள்ள உணர்வோடு ஜெபிப்பதற்கு நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

மூன்றாவதாக, 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்' என்ற இந்த ஜெபத்திற்கூடாக நமது அன்றாட தேவைகளை கடவுளிடத்தில் கொண்டு வருவதற்கு நம்மை ஊக்குவிக்கிறார். சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் 'பூமிக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத ஆன்மீகவாதிகள்' என விமர்சிக்கப்பட்டுள்ளனர். இயேசு நமது எதிர்கால நம்பிக்கை, பரலோகத்தில் பொக்கிஷங்களை சேமித்து வைப்பதை குறித்து அதிகமாக போதித்திருந்தபோதிலும், பூமிக்குரிய யதார்த்தங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். இயேசு தம்முடைய பொதுவான ஊழிய காலம் முழுவதிலும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் அன்றாடப்பிரச்சனைகளுக்கு முன்னுரிமையளித்து, உடனடியாக மாறுத்தரம் அளித்தார். எனவே நமது அன்றாட தேவைகளை ஆழமாக அறிந்த கடவுளை நாம் ஆராதிக்கிறோம் என்ற சிந்தனையானது நமக்கு ஆறுதலை அளிப்பதுடன், அவரை பின்பற்றி நமது கிரியைகளின் மூலமாக உலகில் நாமும் இவ்விதமாக செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

நான்காவதாக, 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்' என்ற இந்த ஜெபவிண்ணப்பமானது, நாம் விரும்புகிற எதையும் வழங்கும்படியாக கடவுளிடம் கேட்பதற்கான அனுமதிப்பத்திரம் அல்ல, மாறாக, நமது வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான தேவையை மாத்திரம் கேட்கிற ஒன்றாகும். அப்பமும், தண்ணீரும் இயேசுவின் காலத்தில் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததாக இருந்ததை அடையாளப்படுத்தின. இயேசு அதை, 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை' என தகுதிப்படுத்துகிறார் அல்லது 'உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவினை' என வேறுவிதமாக இதை மொழிபெயர்க்கலாம். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்களாக அலைந்து திரிந்தபோது, கடவுள் அவர்களுக்கு வழங்கிய மன்னா வேதாகமத்தில் வெளிப்படுத்தப்படுகின்ற மிக நெருக்கமான பின்னணியாகும். அவர்களுக்கான அத்தியாவசிய தேவையாக இருந்த அம்மன்னா, அவர்களின் உயிர்வாழ்விற்கு போதுமானதாக இருந்தது.

மெய்யான ஆவிக்குரிய வாழ்வு மற்றும் கடவுளுடனான நெருங்கிய உறவின் விகிதத்திற்கேற்ப உலகப்பிரகாரமான செல்வமானது அமையும் என்று பரிந்துரைக்கக்கூடிய மிகைப்படுத்தப்பட்ட இன்றைய செழிப்பின் உபதேசம் என கூறப்படும் இறையியலுக்கு சார்பாக ஆண்டவருடைய ஜெபம் எவ்விதத்திலும் உதவவில்லை. மாறாக, மனிதர்களின் பேராசைக்கு ஆதரவளிக்காத ஆனால் எமது அடிப்படையான உடல் மற்றும் உலகப்பிரகாரமான தேவைகளை நோக்கிப்பார்த்து பதிலளிக்கிற ஒரு கடவுளை இது எடுத்துக்காட்டுகிறது.

இயேசு வாழந்த பாலஸ்தீன சமூகத்தில் சிலர் மிகவும் செல்வந்தர்களாக காணப்பட்டாலும், பெரும்பான்மையானவர்கள் ஏழைகளாகவே காணப்பட்டனர். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் நவீன சமூகங்களிலும் காணப்படலாம். 1.6 பில்லியன் மக்கள் தொகையை கொண்ட தெற்காசியாவில், ஒரு நாளைக்கு 1 டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிற 500 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அதேசமயத்தில், உலகின் மிகவும் விலையுயர்ந்த வீட்டினை வானளாவ மும்பாயில் கட்டிய அதன் தெற்காசிய உரிமையாளருக்கு ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் செலவழிந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்' என நாம் ஜெபிக்கும்போது உலகத்தின் யதார்த்தத்தினையும் அறிந்திருப்பதானது நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உண்டாக்கும்.

ஐவோ பூபாலன், Phd